செய்திகள்
ராதாகிருஷ்ணன்

சேலம், கோவை, ஈரோடு, தர்மபுரி, கடலூர் 5 மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது-ராதாகிருஷ்ணன்

Published On 2020-09-22 07:09 GMT   |   Update On 2020-09-22 07:09 GMT
சேலம், கோவை, ஈரோடு, தர்மபுரி, கடலூர் 5 மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் சென்னை உள்பட பல மாவட்டங்களில் நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது. ஆனால் ஒரு சில மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் இன்னும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். முகக்கவசம் அனைவரும் கட்டாயம் அணிந்துதான் வெளியில் வரவேண்டும். இதனை ஏதோ சடங்கிற்காக போடக்கூடாது. உயிரை பாதுகாக்க கூடிய கவசமாக கருத வேண்டும்.

பொது இடங்களில் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதுபோல தனி மனித இடைவெளியையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மார்க்கெட், பஸ் நிலையம், ஜவுளிக்கடை போன்ற பகுதிகளுக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டேன்.

அப்போது பெரும்பாலானவர்கள் முகக் கவசத்தின் அவசியத்தை உணராமல் இருந்தனர். ஏனோ... தானோ என்று பாதி மூடியும் மூடாமலும் போட்டு உள்ளனர். மூக்கு, வாய் பகுதியை முற்றிலும் மூட வேண்டும். அப்போது தான் வைரஸ் கிருமி தாக்காது.

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளை சந்தித்த போது, வெளியில் நடமாடுகிறவர்களை முகக்கவசம் அணிய சொல்லுங்கள் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

80 லட்சம் மக்கள் தொகை கொண்ட சென்னையில் கொரோனா தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் சேலம், கோவை, ஈரோடு, தர்மபுரி, கடலூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. தனி கவனம் செலுத்தி சிறப்பு குழுக்கள் மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரி சோதனை 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணாநகர், கோடம்பாக்கம், பெருங்குடி பகுதியில் தனிக் கவனம் செலுத்தி வருகிறோம். குறிப்பாக பணி செய்கிற இடங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News