செய்திகள்
எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்

வேளாண் மசோதாவை எதிர்த்து பேசியது ஏன்? எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் விளக்கம்

Published On 2020-09-21 08:53 GMT   |   Update On 2020-09-21 08:53 GMT
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவை எதிர்த்து பேசியது ஏன்? என்று எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை பெரும்பாலான கட்சிகள் எதிர்க்கும் நிலையில் அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்து உள்ளது. ஆனால் நேற்று மேல்சபையில் பேசிய அ.தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் வேளாண் சட்ட திட்டங்களை கடுமையாக விமர்சித்தார். இது அ.தி.மு.க.வில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வேளாண் சட்டத்தை எதிர்த்து பேசியது ஏன் என்பதற்கு எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

வேளாண்மை மசோதாக்களில் உள்ள குறைகளை நான் தெரிவித்து உள்ளேன். அதன் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

மசோதாக்களில் உள்ள குறைகளை சொல்வதற்கு உரிமையும், கடமையும் உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டேன்.

இதற்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும். இதை நான் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது. விமர்சனம் செய்வதை குறையாக கருத கூடாது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாய விலை என்பது மிக மிக அவசியமானதாகும்.

குறிப்பாக காவிரி டெல்டா பாசன பகுதிகளில் எந்தவித சேமிப்பு வசதி இல்லாத நிலையில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாய விலை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதை நான் வலியுறுத்தினேன்.

என்றாலும் வேளாண் சட்ட மசோதாக்களை ஆதரித்து வாக்களிக்கும்படி அ.தி.மு.க. தலைமை கேட்டுக் கொண்டது. கட்சி கட்டுப்பாட்டுக்கு இணங்க நான் ஆதரித்து வாக்களித்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News