செய்திகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு : எடப்பாடி பழனிசாமி நாளை ராமநாதபுரம் வருகை

Published On 2020-09-20 23:43 GMT   |   Update On 2020-09-20 23:43 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ராமநாதபுரத்திற்கு வருகை தருகிறார்.
ராமநாதபுரம்:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டந்தோறும் நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார். இதன் அடிப்படையில் நாளை (செவ்வாய்க்கிழமை) ராமநாதபுரம் வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 9.30 மணி அளவில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

மேலும் பொதுப்பணித்துறை (நீர் வள ஆதார அமைப்பு), வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வேளாண்மை பொறியியல் துறை, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறை, பள்ளிக்கல்வி துறை, வணிகவரி மற்றும் பதிவு துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை ஆகிய துறைகளின் சார்பாக பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வேளாண்மை துறை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நிதித் துறை (கருவூலம்) ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதற்காக இன்று (திங்கட்கிழமை) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரவில் மதுரையில் தங்குகிறார். நாளை காலை இங்கிருந்து காரில் புறப்பட்டு காலை 9.30 மணி அளவில் ராமநாதபுரம் வருகிறார்.

நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதிய உணவுக்கு பின்னர் காரில் மீண்டும் மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் விழா ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோல், அ.தி.மு.க. மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பிலும் முதல்- அமைச்சரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முதல்- அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்காக ராமநாதபுரம் புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்கவர் மேடை அமைக்கப்பட்டு வருகிறது. ஆய்வு கூட்டம் நடைபெறும் வளாக பகுதி முழுவீச்சில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், பயனாளிகள் மற்றும் செய்தியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Tags:    

Similar News