செய்திகள்
கோவிஷீல்டு

சென்னையில்‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனை இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கும் - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

Published On 2020-09-20 18:50 GMT   |   Update On 2020-09-20 18:50 GMT
சென்னையில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனை இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்சின்’ தடுப்பூசி 2-வது கட்ட பரிசோதனையில் உள்ளது. இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சோதனை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் உள்ள 17 நகரங்களில் இந்த தடுப்பு மருந்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்தியாவில் சுமார் 1,600 பேரிடம் சோதனை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்து மொத்தம் 300 பேரிடம் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் கண்காணிப்பாளராக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் இயக்குனர் நியமிக்கப்பட்டு இருந்தார்.

“கோவிஷீல்டு” தடுப்பூசி பரிசோதனை பக்கவிளைவுகளை ஏற்படுத்திய காரணத்தால் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டு உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்ஸ்போர்டு நிறுவனம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இந்த சோதனையை நிறுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு பிறகு இந்த சோதனையை மீண்டும் தொடங்க ஆக்ஸ்போர்டு நிறுவனம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் பரிசோதனையை தொடங்க சீரம் நிறுவனத்திற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.

இதனால் சென்னையில் இந்த தடுப்பூசி சோதனை இந்த மாத இறுதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பரிசோதனையில் கலந்து கொள்ளும் 300 தன்னார்வலர்கள் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய பட்டியலுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
Tags:    

Similar News