செய்திகள்
குண்டுமல்லி

சேலத்தில் குண்டுமல்லி விலை உயர்வு- ஒரு கிலோ 360-க்கு விற்பனை

Published On 2020-09-19 14:27 GMT   |   Update On 2020-09-19 14:27 GMT
மழையால் பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டதால், சேலத்தில் குண்டுமல்லி விலை உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிலோ ரூ.360-க்கு விற்பனையானது.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, மல்லூர், கன்னங்குறிச்சி, மேச்சேரி, ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, சன்ன மல்லி, கனகாம்பரம், காக்கட்டான், அரளி, சம்பங்கி, சாமந்தி உள்பட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் பூக்கள் சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் மற்றும் சென்னை, கோவை, பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக சேலத்தில் பெய்து வரும் தொடர்மழையால் குண்டுமல்லி உள்பட பல பூக்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்து அதன் விலை உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வரத்து குறைந்ததால் நேற்று கிலோவுக்கு ரூ. 160 உயர்ந்து குண்டுமல்லி ரூ.360-க்கு விற்கப்பட்டது.

இதேபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து உள்ளது. சன்னமல்லி கிலோ ரூ.300, ஜாதிமல்லி ரூ.140, காக்கட்டான் ரூ.140, வெள்ளை அரளி ரூ.80, செவ்வரளி ரூ.100, நந்தியாவட்டம் ரூ.60, சம்பங்கி ரூ. 90, சாமந்தி ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News