செய்திகள்
தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்ட காட்சி.

தொண்டி அருகே தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

Published On 2020-09-19 08:43 GMT   |   Update On 2020-09-19 08:43 GMT
தொண்டி அருகே கோவில் திருவிழா நடத்த அனுமதிக்கக்கோரி தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
தொண்டி:

திருவாடானை தாலுகா சோளியக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள முனீஸ்வரன் கோவில் திருவிழாவை கொண்டாட சிலர் தடுத்து வருவதாகவும், இங்கு திருவிழா நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் நேற்று காலை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

பின்னர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கிராம மக்களை அழைத்து தாசில்தார் மாதவன் தலைமையில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையிடத்து துணை தாசில்தார் பழனிகுமார் ஆகியோர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

அப்போது அரசின் தடை உத்தரவு நடைமுறையில் இருப்பதால் கோவில் திருவிழாவை அரசின் விதிகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியை பின்பற்றியும் முக கவசங்கள் அணிந்து நடத்த வேண்டும் என அறிவுரை வழங்கி திருவிழா கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கலைந்து சென்றனர். இப்போராட்டத்தில் இந்து ஜனநாயக பேரவை நிறுவனத் தலைவர் அண்ணாதுரை, இந்து மக்கள் நல இயக்க நிறுவன தலைவர் இளையராஜா, கோவில் பூசாரி முனியசாமி, தொண்டி செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News