செய்திகள்
காலண்டர்

காலண்டர் தயாரிக்கும் பணிகள் கடும் பாதிப்பு- ரூ.80 கோடி இழப்பு

Published On 2020-09-18 08:50 GMT   |   Update On 2020-09-18 08:50 GMT
வழக்கமாக ஆண்டு தோறும் ரூ.200 கோடிக்கு காலண்டர் விற்பனை நடைபெறும். இந்த ஆண்டு அதில் ரூ.80 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசுகள் மட்டுமின்றி காலண்டர் தயாரிப்பு பணியும் நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் ஆடி பெருக்கு நாளில் ஆல்பம் வெளியிட்டு ஆர்டர்களை பெற்று இந்த காலக்கட்டத்துக்குள் பெருமளவு காலண்டர்கள் தயாரிக்கும் பணி முடிந்து விடும்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் இங்கு காலண்டர்கள் தயாரிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக காலண்டர் தயாரிக்கும் பணி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வெளிமாநில ஆர்டர்கள் வராததுதான்.

சிவகாசியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் தினசரி மற்றும் மாத காலண்டர்களை தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளன.

இதுகுறித்து காலண்டர் அச்சிடும் நிறுவனத்தினர் கூறியதாவது:-

பல மொழிகளில் நாங்கள் காலண்டர்களை இதற்குள் அச்சிட்டு முடித்து விற்பனையை தொடங்கி இருப்போம். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு தயாரிப்பு மற்றும் விற்பனையில் 30 முதல் 40 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து வழக்கமாக ஆண்டின் பாதியில் ஆர்டர்கள் வரத்தொடங்கும். எங்களது பிரதிநிதிகளும் வெளிமாநிலங்களுக்கு சென்று ஆர்டர் எடுத்து வருவார்கள். ஆனால் தற்போது வெளிமாநிலங்களுக்கு செல்ல போக்குவரத்து இல்லாததால் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் கொரோனா காலத்தில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதால் காலண்டர் ஆர்டர்கள் குறைந்துள்ளன.

வழக்கமாக நிறுவன பெயர்கள், படங்கள் போட்டு வர்த்தக நிறுவனங்கள் மாதாந்திர மற்றும் தினசரி காலண்டர்களை தயாரிக்க ஆர்டர் கொடுத்து விடுவார்கள். இந்த ஆண்டு அதுவும் குறைந்துள்ளது.

மேலும் ஊரடங்கு காரணமாக மார்ச் 25-ந்தேதி முதல் அச்சகங்கள் மூடப்பட்டன. அதன் பின்னர் ஊரடங்கு தளர்வில் 33 சதவீத தொழிலாளர்களை வைத்து தொழில் நடத்த அரசு அனுமதி அளித்தது.

ஆனால் அப்போது போக்குவரத்து வசதி முற்றிலும் தடைப்பட்டு இருந்ததால் தொழிலாளர்கள் வேலைக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் திட்டமிட்டப்படி காலண்டர் தயாரிப்பு பணிகளை தொடங்க முடியவில்லை.

தற்போது 100 சதவீத பணியாளர்களை கொண்டு காலண்டர் தயாரிப்பில் இறங்கி உள்ளோம். இருப்பினும் இவற்றை விற்பனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல பொது போக்குவரத்து இல்லை. மேலும் இ-பாஸ் பெறுவதிலும் சிரமம் உள்ளது. எனவே உற்பத்தி செய்த காலண்டர்களை விற்க முடியுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

வழக்கமாக ஆண்டு தோறும் ரூ.200 கோடிக்கு காலண்டர் விற்பனை நடைபெறும். இந்த ஆண்டு அதில் ரூ.80 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.
Tags:    

Similar News