செய்திகள்
மெட்ரோ ரெயில் நிலையம்

விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வருகை அதிகரிப்பு

Published On 2020-09-18 02:50 GMT   |   Update On 2020-09-18 02:50 GMT
விமான நிலையம் மெட்ரோ ரெயில் நிலையம் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் இடமாக மாறியுள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள்.
சென்னை:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டு இருந்த மெட்ரோ ரெயில் போக்குவரத்து கடந்த வாரம் முதல் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போது ஒரு நாளைக்கு 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கின்றனர். இதில் குறிப்பாக விமானநிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து மட்டும் சராசரியாக ஆயிரம் முதல் 1,200 பயணிகள் வரை தினசரி கையாளப்பட்டு வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் தற்போது உள்நாட்டு விமான போக்குவரத்தும் அதிகரித்திருப்பதால் மெட்ரோ ரெயில் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பல விமானிகளும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமான நிலையம் செல்வதற்கு மெட்ரோ ரெயிலையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இதனை தொடர்ந்து, மீனம்பாக்கம் மற்றும் ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 700 முதல் ஆயிரம் பேர் வரை பயணம் செய்கின்றனர். புறநகர் ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படாததால், வடக்கு புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் மெட்ரோ ரெயிலை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

புறநகரான குரோம்பேட்டை, பல்லாவரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் தங்கள் வாகனங்களை மெட்ரோ ரெயில் நிலைய வாகனம் நிறுத்தும் இடங்களில் நிறுத்துகின்றனர். ஆனால், விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்த கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதால், பயணிகள் தங்கள் வாகனங்களை மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்துகின்றனர். இதுகுறித்து பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்து உள்ளனர்.

ஐகோர்ட்டு, பாரிமுனை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் செல்வோர் ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். படிப்படியாக இங்கு பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அதேபோல், பாடி, கொரட்டூர், ரெட்டேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். விமானநிலைய மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு அடுத்தபடியாக திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையமும் காலப்போக்கில் மேம்படும் என்று தெரிகிறது. அரும்பாக்கம், நேரு பார்க், சைதாப்பேட்டை போன்ற ரெயில் நிலையங்கள் ஆரம்பத்தில் இருந்ததைவிட தற்போது வரவேற்பு இல்லாததுடன், எதிர்பார்த்த அளவுக்கும் கீழே குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் வருகை தருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் முழுமையாக செயல்பட தொடங்கும் போது இந்த ரெயில் நிலையங்களுக்கும் கணிசமான எண்ணிக்கையில் பயணிகள் வருவார்கள்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Tags:    

Similar News