செய்திகள்
எஸ்.வி.சேகர்

தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு- எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

Published On 2020-09-16 10:23 GMT   |   Update On 2020-09-16 10:23 GMT
தேசியக் கொடியை அவமதித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:

மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கைக்கு முதலமைச்சர் பழனிசாமி உட்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட பாஜகவின் எஸ்.வி.சேகர், தேசிய கோடியை அவமதிக்கும் விதமாகவும் முதலமைச்சர் பழனிசாமியை விமர்சித்து பேசியிருந்தார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையத்தில் எஸ்வி சேகருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. 

சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்ற பிரிவு போலீசார் எஸ்.வி.சேகரிடம் விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது, தேசிய கொடியை அவமதித்ததற்கு எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் அவரை கைது செய்ய மாட்டோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தேசிய கொடியை அவமதித்ததற்கு நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்தார். எதிர்காலத்தில் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார். இதனை காவல்துறையும் ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், எஸ்.வி.சேகருக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். விசாரணைக்கு தேவைப்படும்போது காவல்துறை முன் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News