செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

மதுரையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு காரணம் என்ன?- சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்

Published On 2020-09-15 02:38 GMT   |   Update On 2020-09-15 02:38 GMT
மதுரையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதற்கான காரணம் என்ன என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
மதுரை:

மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஒட்டுமொத்த இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி விட்டது. அதன்படியே தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடக்க காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், தற்போது குறைய தொடங்கி இருக்கிறது.

தொடக்கத்தில் கொரோனா பாதிக்கப்படாத மாவட்டங்களில் தற்போது கொரோனா அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதாவது கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆரம்ப காலத்தில் நாளொன்றுக்கு 10, 20 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 300, 400 என அதிகரித்து வருகிறது. இது ஒரு சங்கிலி தொடர் போன்றது தான். கொரோனா பாதிப்பானது அதிகரித்து குறையும். அந்த வகையில் மதுரையில் தற்போது கொரோனா பாதிப்பு இறங்குமுகமாக மாறி இருக்கிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தான் காரணம். வரும் காலங்களிலும் அவர்கள் தொடர்ந்து இதுபோன்று மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். மற்ற நோய்கள் போல் கொரோனாவிடம் அலட்சியம் காட்டக்கூடாது. அலட்சியம் காட்டினால் அது விபரீதமாக மாறிவிடும். எனவே பொது இடங்களுக்கு செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News