செய்திகள்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

காமராஜர் பல்கலைக்கழக இறுதியாண்டு பருவத்தேர்வு 18-ந் தேதி ஆன்லைன் மூலம் நடக்கிறது

Published On 2020-09-15 02:29 GMT   |   Update On 2020-09-15 02:29 GMT
மதுரை காமராஜர் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளுக்கான இறுதியாண்டு இளநிலை, முதுநிலை பட்டபடிப்பு பருவத்தேர்வுகள் வருகிற 18-ந் தேதி முதல் ஆன்லைனில் நடக்கிறது. இதில் 48 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
மதுரை:

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதிவாரத்தில் இருந்து மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். அதேபோல, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு கடைசி பருவத்தேர்வுகளை தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அத்துடன், பிற பருவத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்த திட்டம் கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. ஏற்கனவே, பிற கல்வியாண்டில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாமல் கடந்த மே மாதம் ரத்து செய்யப்பட்ட பருவத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த அனைத்து மாணவ,மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இது பல பாடங்களில் தேர்ச்சி பெறமுடியாமல் திணறிய மாணவ,மாணவிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்தது. இதற்கிடையே, கடைசிப்பருவத்தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வருகிற 18-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கடைசிப்பருவ தேர்வுகள் நடக்க உள்ளன. இந்த தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை துணைவேந்தர் கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

அதன்படி, பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற 59 கல்லூரிகள், 24 தன்னாட்சி பெற்ற கல்லூரிகள், 4 பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக துறைகளை சேர்ந்த 49 முதுநிலை பட்டப்படிப்புகள் என அனைவருக்கும் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.

அதாவது, தேர்வுக்கான வினாத்தாள் தேர்வு தொடங்குவதற்கு அரைமணி நேரம் முன்னதாக அந்தந்த கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழக துறைத்தலைவர்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும். கல்லூரி முதல்வர்கள் அந்தந்த துறைத்தலைவர்களுக்கு அனுப்பி வைப்பர். அவர்கள் மூலம் மாணவர்களின் இ-மெயில் முகவரிக்கு வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும்.

தேர்வுகளை மாணவ,மாணவிகள் அவரவர் இருப்பிடத்தில் இருந்தே எழுதிக்கொள்ளலாம். புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதக்கூடாது. இதற்கான உறுதிமொழி விண்ணப்பத்தில் மாணவர்கள் கையெழுத்திட வேண்டும்.

விடைத்தாள்களை மாணவர்கள் ஸ்கேன் செய்து துறைத்தலைவரின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அந்தந்த கல்லூரிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். கல்லூரிகளுக்கு நேரில் சென்று தங்களது துறையில் சமர்ப்பிக்கலாம் என்ற 3 விதமான வழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் விடைத்தாள்களை அவர்களாகவே மதிப்பீடு செய்து கொள்ளும். பிற கல்லூரிகளின் விடைத்தாள்களை வழக்கம் போல பல்கலைக்கழகம் மதிப்பீடு செய்யும்.

அதன்படி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நடத்தும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புக்கான இறுதியாண்டு கடைசிப்பருவத்தேர்வை 48 ஆயிரம் மாணவ,மாணவிகள் எழுத உள்ளனர். ஏற்கனவே இறுதியாண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம்.
Tags:    

Similar News