செய்திகள்
மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சி

மழை நீரில் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலி

Published On 2020-09-15 01:44 GMT   |   Update On 2020-09-15 01:44 GMT
மழைநீரில் நடந்து சென்ற பெண், பூமிக்கு அடியில் சென்ற மின்சார வயரை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பலியானார்.
திரு.வி.க. நகர்:

புளியந்தோப்பு, பெரியார் நகர் குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வந்தவர் அலிமா (வயது 45). இவருடைய கணவர் ஷேக் இப்ராகிம். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். அலிமா தனது கணவரையும், மகனையும் பிரிந்து தனியாக வசித்து வந்தார். அலிமா, வீட்டு வேலை செய்து பிழைத்து வந்தார்.

நேற்று காலை வீட்டு வேலை செய்ய நாராயணசாமி தெருவில் அலிமா நடந்து சென்று கொண்டிருந்தார். சென்னையில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து கொண்டே இருந்ததால் அந்த தெருவில் மழைநீர் தேங்கி நின்றது. அந்த பகுதியில் சாலையோரம் பூமிக்கு அடியில் சென்று கொண்டிருந்த மின்சார வயர், வெளியே தெரியும்படி இருந்தது.

மழைநீரில் நடந்து வந்த அலிமா, இதனை கவனிக்காமல் பூமிக்கு அடியில் சென்ற மின்சார வயரை மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலானது. இதை பார்த்தவர்கள் பெரும் வேதனை அடைந்தனர்.

இதற்கிடையில் இதுபற்றி தகவல் அறிந்து வந்த புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் பலியான அலிமா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அங்கு வந்த சென்னை மாநகராட்சி மற்றும் மின்சார வாரிய ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு இதே தெருவில் மின்கசிவு ஏற்பட்டு 2 பேர் பாதிக்கப்பட்டதால் பூமிக்கு அடியில் செல்லும் மின்வயரில் ஏற்படும் மின் கசிவை சரி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தோம். ஆனால் அவர்கள் புகாரை பெறாமல் மின்சார வாரியத்தில் புகார் தெரிவிக்கும்படி கூறினர். இதுபற்றி மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தபோது அவர்களும், இது மாநகராட்சிக்கு உரிய வேலை என்று தட்டிக்கழித்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நிரந்தர தீர்வு காணப்படும் என போலீஸ் அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News