செய்திகள்
பெரம்பலூரில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது- ஆ.ராசா

Published On 2020-09-10 09:31 GMT   |   Update On 2020-09-10 09:31 GMT
தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது என்று தி.மு.க. துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட ஆ.ராசா கூறினார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் துறைமங்கலத்தில் ஓட்டல் ரத்னா கூட்ட அரங்கில் தி.மு.க.பொதுக்குழுகூட்டம் காணொலி காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஆ.ராசா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி ஆகியோரின் கொள்கைகள் மீது அதிக பிடிப்பு கொண்ட எனக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கியுள்ளார். அவருக்கும், கழக தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க. கூட்டணி மிக வலுவாக உள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. இந்தியா முழுமைக்கும் காவிச்சாயம் ஏற்றி வரும், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார். எனவே பா.ஜ.க உடன் தேர்தல்கூட்டணி நிச்சயம் இருக்காது. ‘நீட்’ தேர்வில் அரியலூர் அனிதா தொடங்கி தற்போது வரை மத்திய அரசு நமது கோரிக்கையை செவிமடுக்கவில்லை. தமிழகத்தை ஆளும் அடிமை அரசு, மத்திய அரசை நேரடியாக எதிர்த்துக் கேட்காமல் சாக்குப்போக்கு சொல்லி வருகிறது.

மும்மொழிக் கொள்கையை பாராளுமன்றத்தில் எதிர்த்து குரல் கொடுக்க கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் எல்லையை தாண்டி பிற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையை எதிர்க்க தி.மு.க. பூர்வாங்க திட்டத்தை எடுத்து முன்வைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஆ.ராசா பெரம்பலூரில் உள்ள தந்தை பெரியார், காந்தி, அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்பு தனது சொந்த ஊரான வேலூரில் உள்ள பெற்றோர் சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News