செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-09-07 08:38 GMT   |   Update On 2020-09-07 08:38 GMT
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில்  இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கோவை, நீலகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும்  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரமக்குடியில் 11 செமீ மழை பெய்துள்ளது. கீழ் கோதையாறில் 9 செமீ, கடம்பூர் மற்றும் கயத்தாறில் தலா 6 செமீ, தேவாலா, சத்தியமங்கலத்தில் தலா 5 செமீ மழை பதிவாகி உள்ளது.

மேலும், மீனவர்கள் தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு, லட்சத்தீவு பகுதி, குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News