செய்திகள்
மு.க.ஸ்டாலின்

தேசிய கல்வி கொள்கை : கவர்னர்களிடம் கருத்து கேட்கும் முயற்சியை பிரதமர் கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Published On 2020-09-05 22:00 GMT   |   Update On 2020-09-05 22:00 GMT
தேசிய கல்வி கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் முன்பு கவர்னர்களிடம் கருத்து கேட்கும் முயற்சியை பிரதமர் கைவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ள நிலையில், அங்கே விவாதங்கள் இடம்பெறும் வரை பொறுத்திருக்காமல், அவசரம் அவசரமாக, 7-ந் தேதி (நாளை) கவர்னர்கள் மாநாட்டை கூட்டி, புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து ஜனாதிபதியும், பிரதமர் நரேந்திர மோடியும், கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியாலும் கவர்னர்களிடம் கருத்து கேட்க முனைவது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல் என்பதால், அது ஏற்புடையதல்ல.

புதிய தேசிய கல்வி கொள்கை வெளியிடுவதற்கு முன், மாநில கல்வி மந்திரிகள் பங்கேற்கும் மத்திய ஆலோசனை வாரியம் என்ற அமைப்பின் கூட்டத்தில், பா.ஜ.க. அரசாங்கம் இது குறித்து விவாதிக்கவில்லை. இந்நிலையில், மத்திய அரசின் பிரதிநிதிகளாக மாநிலங்களில் இருக்கும் கவர்னர்களிடம் கருத்து கேட்பது என்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மறுதலிப்பதும், நாடாளுமன்றத்தின் பரிமாணங்களை குறைப்பதுமே ஆகும்.

போதாக்குறைக்கு மாநில உரிமைகளுக்காக எந்த நிலையிலும் போராட விருப்பமோ தயாராகவோ இல்லாத அ.தி.மு.க. அரசு, உயர் கல்வித்துறை செயலர் தலைமையில் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து கருத்து பெற ஒப்புக்காக குழு ஒன்றை அமைத்துள்ளது. இதில் முன்னாள் துணை வேந்தர்கள் இருவர், இப்போது பதவியில் இருக்கும் துணை வேந்தர்கள் 4 பேர் உள்ளனர். ஆனால், இதில் முனைவர் வசந்திதேவி போன்ற கல்வியாளர்களோ, கல்வி ஆர்வலர்களோ, ஆசிரியர் சங்க மற்றும் மாணவர் சங்க சார்பாளர்களோ யாரும் இல்லை.

எனவே தமிழக அரசு அமைத்துள்ள குழு என்ன கூறும் என்பதை ஊகிக்க முடியும். அது கூற இருக்கும் பரிந்துரைகள் மீது பாரத்தை போட்டு, தந்திரமாக தப்பித்து விடலாம் என அ.தி.மு.க. அரசு நினைப்பதாகவே தெரிகிறது. எனவே இது ஒரு கண்துடைப்பு கமிட்டி என்றே எண்ணிட வேண்டியிருக்கிறது.

ஆகவே, புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து கருத்து கேட்கும் குழுவில், பெற்றோர்கள், மாணவர்களின் பிரதிநிதிகளையும், புதிய கல்வி கொள்கையின் மறுபக்க அம்சங்களை கூறி வரும் முன்னாள் துணை வேந்தர்களையும் சேர்க்க வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து அங்கு விவாதிக்கப்படும் முன்பு, கவர்னர்களிடம் கருத்து கேட்கும் முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி கைவிட்டு, நாடாளுமன்றத்தில் ஜனநாயக ரீதியான நேர்மையான விவாதங்களுக்கு வழியமைத்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News