செய்திகள்
ஜவாஹிருல்லா

ஆன்-லைன் கல்வி முறையை அரசு முறைப்படுத்த வேண்டும்: ஜவாஹிருல்லா

Published On 2020-09-04 07:52 GMT   |   Update On 2020-09-04 07:52 GMT
ஏழை மாணவர்களின் வாழ்வில் விளையாடும் ஆன்-லைன் கல்வி முறையை அரசு முறைப்படுத்த வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனாவின் பேராபத்திலிருந்து மக்கள் இன்னும் மீண்டுவரமுடியாத சூழலில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் ஆன்லைன் கல்வி கடந்த இரண்டு மாதங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

பரிசோதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த வகுப்புகளினால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்பட்ட இன்னல்கள் சொல்லி மாளாதது. இவற்றை களையாமலேயே தொடர்ந்து நடத்தப்பட்டு வந்ததினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு நிலைமை ஏற்பட்டுள்ளது வருத்ததிற்குரியது.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டு நன்னாவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி குடும்பத்தில், ஒரு செல்பேசியிலிருந்து ஆன்லைன் வகுப்புகளைத் கவனிப்பற்காக மூன்று சகோதரிகளுக்கிடையே ஏற்பட்ட வருத்தத்தில் நித்யஸ்ரீ என்ற நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தியும் இதேபோல் தனது தந்தையால் செல்போன் வாங்கி தர இயலவில்லை என்பதால் பண்ருட்டி அருகில் சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்த முந்திரி விவசாயியின் மகன் விக்னேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டதும் ஆன்லைன்வழி கல்வியின் போதாமையையே வெளிப்படுத்துகிறது.

ஒரு நாளைக்கு இரண்டு வகுப்புகள் என்று பொத்தாம் பொதுவாக அரசு சொன்னாலும் அதனை முறையாகக் கண்காணிக்காததினால் பல மணி நேரங்கள் மாணவர்கள் கண்ணைக் கெடுக்கும் ஒளித் திரைகளில் சிக்கி மனவுளைச்சல் அடைந்து வருகின்றனர்.

எனவே தமிழக அரசு நடந்த தற்கொலைகளைக் கருத்தில் கொண்டு விபரீதங்களை விளைவிக்கும் ஆன்லைன் கல்வி முறையை ஒழுங்குப்படுத்த வேண்டும். மாணவர்களின் குடும்பச் சூழலைப் பள்ளிகளும் கல்லூரிகளும் புரிந்துகொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவர்கள் திடமனதுடன் உடல்நலத்துடன் ஆர்வமாகக் கற்கக்கூடிய சூழ்நிலையை தமிழக அரசு விரைந்து உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News