செய்திகள்
எஸ்வி சேகர்

இனி அப்படி பேசமாட்டேன்- தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில் வருத்தம் தெரிவித்தார் எஸ்.வி.சேகர்

Published On 2020-09-03 08:13 GMT   |   Update On 2020-09-03 08:13 GMT
தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில் பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் ஐகோர்ட்டில் வருத்தம் தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னை:

தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில், தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் காவல்துறையின் விளக்கத்தைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சார்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜரானார். அப்போது, தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என உத்தரவாதம் அளிப்பதோடு, நடந்தவற்றுக்கு நீதிமன்றத்தின் முன் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவித்தார். அதேசமயம், இந்த வழக்கை ரத்து செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

இவற்றைப் பதிவு செய்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினால் கைது செய்ய மாட்டோம் என காவல்துறை தெரிவித்துள்ளது குறித்து, மனுதாரர் முடிவெடுத்து, அவரது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் தேசியக்கொடியை அவமதித்தது தொடர்பாக எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், எதிர்காலத்தில் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேசமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் செப்டம்பர் 7ம் தேதி வரை எஸ்.வி.சேகரை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
Tags:    

Similar News