செய்திகள்
வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

போயஸ் கார்டனில் உள்ள சசிகலா பங்களாவில் நோட்டீஸ் ஒட்டிய வருமானவரித்துறை

Published On 2020-09-02 23:52 GMT   |   Update On 2020-09-02 23:52 GMT
சசிகலாவின் சொத்துகளை முடக்கம் செய்ததாக, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது பங்களாவின் முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.
சென்னை:

கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துகள் வருமான வரித்துறையால் முடக்கம் செய்யப்பட்டு உள்ளன. சென்னையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் எதிரே இருந்த 10 கிரவுண்ட் இடம் சசிகலாவுக்கு சொந்தம் என கூறப்பட்டது.

இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இந்தநிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. இந்த நடவடிக்கை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு உள்ளது.

போயஸ் கார்டனில் உள்ள குறிப்பிட்ட அந்த 10 கிரவுண்ட் இடத்தில் தற்போது பங்களா வீடு கட்டப்பட்டு வருகிறது. தெலுங்கானாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் மூலம் இந்த சொத்தை சசிகலா வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் பங்களா வீட்டின் முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர்.

அந்த நோட்டீசில், ‘பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த சொத்து முடக்கப்பட்டு இருக்கிறது. எனவே இனி இந்த சொத்துக்கு உரிமையாளர் என கருதப்படுபவர், இனி இந்த சொத்தின் பயனை பெறவோ, அனுபவிக்கவோ முடியாது. இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்ட 90 நாட்களுக்குள் இதற்கான விளக்கத்தை சம்பந்தப்பட்ட சொத்தின் உரிமையாளர் அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

போயஸ் கார்டன் வீடு தவிர சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்ட அனைத்து இடத்திற்கும் விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது எனவும், இந்த விளக்க நோட்டீசின் பிரதிகள் சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் சொத்துகளை பதிவு செய்த சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாகவே வருமான வரித்துறை அதிகாரிகள் இதுபோல விளக்க நோட்டீஸ் கொடுக்கச்செல்லும்போது சம்பந்தப்பட்டவர்களை நேரில் அணுகியோ அல்லது கடிதம் மூலமாகவோ தருவார்கள். ஆனால் போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் வீட்டில் கட்டுமான பணியாளர்கள் தவிர யாரும் இல்லாததால் அந்த விளக்க நோட்டீசை அதிகாரிகள் ஓட்டி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News