செய்திகள்
மரணம்

இரும்பு வடக்கம்பி அறுந்து விழுந்து தந்தை, மகன் பலி

Published On 2020-09-02 06:54 GMT   |   Update On 2020-09-02 06:54 GMT
காங்கேயம் அருகே, விவசாய கிணற்றில் மோட்டார் பழுது நீக்குவதற்கு இரும்பு வடக்கம்பி மூலம் கிணற்றில் இறங்கும் பணி நடந்தது. அப்போது கம்பி அறுந்து விழுந்து தந்தை, மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காங்கேயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை ஊராட்சி சர்வேயர் தோட்டத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 75). விவசாயி. இவரது மகன் ராஜேந்திரன் (47). இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், ராகவி (24) என்ற மகளும், ராகுல் (21) என்ற மகனும் உள்ளனர். இவர்களுக்கு வீட்டின் அருகே கிணற்றுடன் கூடிய தோட்டம் உள்ளது. இந்த கிணற்றில் இருந்த மின்மோட்டார் பழுதாகி இருந்தது. அதை சரி செய்வதற்காக நேற்று மதியம் 2 மணியளவில், பழனிச்சாமி, ராஜேந்திரன் மற்றும் ராகுல் ஆகியோர் சென்றுள்ளனர்.

இதில், பழனிச்சாமியும், ராஜேந்திரனும், கிணற்றில் பொருத்தியிருந்த கிரேன் (இரும்பு வடக்கம்பி) மூலம் கிணற்றுக்குள் இறங்கியுள்ளனர். கிரேனை ராகுல் இயக்கினார். இதில், கிரேன் 5 அடி ஆழம் கிணற்றுக்குள் இறங்கிய நிலையில், திடீரென இரும்பு வடக்கம்பி அறுந்து கிணற்றினுள் விழுந்தது.

80 அடி ஆழமுள்ள கிணற்றில் 2 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருந்துள்ளது. கம்பி அறுந்ததால், இருவரும் 75 அடி உயரத்தில் இருந்து கீழே வேகமாக தலைகுப்புற விழுந்தனர். இதில் தலை, மார்பு பகுதியில் இருவருக்கும் பலத்த அடிபட்டு, உள்ளே விழுந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு தீயணைப்பு துறையினர் வந்து இருவரையும் மீட்பதற்கு கிணற்றிக்குள் இறங்கி பார்த்தபோது, பழனிச்சாமியும், ராஜேந்திரனும் உயிரிழந்தது தெரியவந்தது.
Tags:    

Similar News