செய்திகள்
தமிழக அரசு

வணிக வளாகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழக அரசு வெளியீடு

Published On 2020-08-31 10:51 GMT   |   Update On 2020-08-31 10:51 GMT
தமிழகத்தில் வணிக வளாகங்கள் நாளை முதல் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
சென்னை:

இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் 7-வது கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது.

மத்திய அரசு நேற்று முன்தினம் 4-வது கட்ட தளர்வுகளை அறிவித்தது. அப்போது, மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்துக்கு தடை இல்லை. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை படிப்படியாக தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, புதிய தளர்வுகளை அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் 30-9-2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

எனினும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் வேறு சில குறிப்பிட்ட பணிகளுக்கும் 1-9-2020 (நாளை) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன், மத்திய அரசின் குளிர்சாதன வசதி குறித்த வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயக்க தடை தொடரும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் நாளை முதல் வணிக வளாகங்கள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளிட்டுள்ளது. பொதுமக்கள் உள்ளிட்டோர் இதனை முறையாக கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது. இதன்படி, 

* வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்திருப்பது கட்டாயம்.

* வாடிக்கையாளர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி வாசல்கள் இருக்க வேண்டும்.

* நோய் அறிகுறி உள்ளவர்களை அனுமதிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News