செய்திகள்
கொடைக்கானல்

இ-பாஸ் தளர்வால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

Published On 2020-08-29 10:35 GMT   |   Update On 2020-08-29 10:35 GMT
இ-பாஸ் தளர்வு அறிவிப்பால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொடைக்கானல்:

தமிழகத்தில் மாவட்டம் விட்டு வேறு மாவட்டத்துக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த வாரம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் அண்டை மாவட்டத்துக்கு வேலைக்கு செல்வோர் மற்றும் விசே‌ஷங்களுக்காக வெளியூர் செல்வோர் மகிழ்ச்சியடைந்து எளிதான முறையில் இ-பாஸ் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இருந்தபோதும், பொது போக்குவரத்துஇல்லாததால் சொந்த வாகனங்களிலோ அல்லது வாடகை கார்களிலோ செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பொது போக்குவரத்து இல்லாத நிலையிலும் சுற்றுலா நகரான கொடைக்கானலுக்கு வெளி மாவட்ட மக்கள் வருவதை தீவிரமாக போலீசார் கண்காணித்து வந்தனர்.

தற்போது தினசரி சுமார் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வெளியூர் நபர்கள் கொடைக்கானல் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். அரசு உத்தரவுபடி சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் பூங்கா, பேரிஜம், குணா குகை உள்ளிட்ட முக்கிய இடங்களை பார்க்க முடியாவிட்டாலும், வெள்ளி நீர் நீழ்ச்சி, நட்சத்திர ஏரி உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு குவிந்து வருகின்றனர்.

கொடைக்கானலில் கடந்த 5 மாதமாக சுற்றுலா பயணிகள் வராமல் இருப்பதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள அனைவரும் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர். ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் ஆகியவை பூட்டப்பட்டு உள்ளன. சுற்றுலா வாகனங்கள், வழிகாட்டிகள் ஆகியோர் தொழிலை இழந்து உள்ளனர். இந்நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தமிழக அரசு அறிவிக்கும் ஊரடங்கு தளர்வில் சுற்றுலா பயணிகள் வருகை குறித்த அறிவிப்பும் இடம் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News