செய்திகள்
சபாநாயகர் காணொலி காட்சி மூலம் விசாரணை

11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்- சபாநாயகர் விசாரணை

Published On 2020-08-27 05:56 GMT   |   Update On 2020-08-27 05:56 GMT
11 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில், சபாநாயகர் தனபால் காணொலிக் காட்சி மூலம் எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
சென்னை:

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 11 எம்.எல்.ஏ.க்கள் பிரிந்தனர். இந்தநிலையில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதியன்று சட்டசபையில் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேரும் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

கட்சியின் கொறடா பிறப்பிக்கும் உத்தரவின்படிதான் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். இந்த தீர்மானத்தில் கொறடாவின் உத்தரவுப்படி அரசுக்கு சாதகமாக 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கவில்லை. எனவே கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் பார்த்திபன் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்தனர்.

பின்னர் இந்த விவகாரம் சம்பந்தமான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சபாநாயகர் முடிவே இறுதியானது. அதில் கோர்ட்டு தலையிடாது என்று 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் கடந்த பிப்ரவரி 14-ந் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களிடம் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்று தமிழக சட்டசபை தரப்பில் வாதிடப்பட்டது.

எனவே சட்டத்தின் அடிப்படையில் சபாநாயகர் முடிவெடுப்பார் என்ற நம்பிக்கையை தெரிவித்து மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.

இந்தநிலையில் தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு பிறகும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக உத்தரவிட வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று புகார் அளித்த 6 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அளித்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக 11 எம்.எல்.ஏ.க்களிடம் சபாநாயகர் ப.தனபால் காணொலிக் காட்சி மூலம் இன்று விசாரணை நடத்துகிறார்.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களில் முதல்கட்டமாக பாண்டியராஜன், நட்ராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News