செய்திகள்
அமைச்சர் கேபி அன்பழகன்

என்ஜினீயரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான ‘ரேண்டம் எண்’ இன்று வெளியீடு

Published On 2020-08-26 03:10 GMT   |   Update On 2020-08-26 03:10 GMT
என்ஜினீயரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று மாலை வெளியிடுகிறார்.
சென்னை:

இந்த ஆண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புகளில் சேர கடந்த மாதம் 15-ந்தேதி ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு தொடங்கி, கடந்த 16-ந்தேதி முடிவடைந்தது. முந்தைய ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவ-மாணவிகள் போட்டிப்போட்டு விண்ணப்பித்தனர். மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 436 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி இருந்தனர். இதில் 29 ஆயிரத்து 398 பேர் விருப்பம் தெரிவிக்காமல் கட்டணம் செலுத்தவில்லை.

விண்ணப்ப கட்டணம் செலுத்தியவர்கள் அடுத்தகட்டமாக சான்றிதழ் பதிவேற்றம் செய்யவேண்டும். அதன்படி, நேற்று முன்தினம் வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். அதன்படி ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 பேர் தங்களுடைய சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர். விண்ணப்ப கட்டணம் செலுத்தியவர்களில், 17 ஆயிரத்து 230 பேர் விருப்பம் காட்டாதது இதன் மூலம் தெரியவந்து இருக்கிறது. இந்த புள்ளி விவரங்களை பார்க்கும்போது, கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே விண்ணப்பித்தவர்களில் 46 ஆயிரத்து 628 பேர் ஆர்வம் காட்டாதது தெரிய வருகிறது.

இதனைத்தொடர்ந்து ரேண்டம் எண் வெளியிடப்படும். அதன்படி, விண்ணப்ப கட்டணம் செலுத்தி, சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று மாலை 4 மணிக்கு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியின் ஒருங்கிணைந்த பயிலரங்க வளாகத்தில் வெளியிடுகிறார். 
Tags:    

Similar News