செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு

குட்கா உரிமை மீறல் வழக்கு- 21 திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

Published On 2020-08-25 03:34 GMT   |   Update On 2020-08-25 03:34 GMT
சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
சென்னை:

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தடை செய்யப்பட்ட இந்த புகையிலை பொருட்கள் தாராளமாக தமிழகத்தில் கிடைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தி.மு.க.வினர் கொண்டு சென்று சபாநாயகரிடம் காண்பித்தனர்.

இதையடுத்து தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்து, அந்த நோட்டீசுக்கு தடை பெற்றனர். பின்னர் இந்த வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் சட்டமன்றத்துக்குள்  குட்கா கொண்டு சென்றதற்காக உரிமைக் குழு அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, உரிமைக்குழுவின் நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என, இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். பின்னர் இவ்வழக்கு, தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, ஆகஸ்ட் 14-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
Tags:    

Similar News