செய்திகள்
பூண்டி ஏரி

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு அடுத்த மாதம் தண்ணீர் திறக்க திட்டம்

Published On 2020-08-24 07:29 GMT   |   Update On 2020-08-24 07:29 GMT
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நடப்பாண்டுக்கான முதல் தவணை தண்ணீர் செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது.
சென்னை:

சென்னையின் குடிநீர் தேவைக்காக தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்படி ஆண்டுதோறும் முதல் தவணையாக ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி.யும், 2-வது தவணையாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. உள்பட 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்கவேண்டும்.

ஆனால் கடந்த 1996-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஏதாவது ஒரு காரணத்தால் 12 டி.எம்.சி. தண்ணீர் முழுமையாக எந்த ஆண்டும் வழங்கப்படவில்லை.

நடப்பாண்டு, முதல் தவணை தண்ணீரை வழங்க தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆந்திர நீர்ப்பாசன துறைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதினர். ஆனால் அப்போது அங்குள்ள நாகர்ஜூனா சாகர், ஸ்ரீசைலம், சோமசீலா மற்றும் கண்டலேறு அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை.

தற்போது தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் இந்த அணைகளின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. 63 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 20 டி.எம்.சி. தண்ணீர் தற்போது இருப்பு உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும், பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளிலும் சேர்த்து 4.3 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த நிலையில் தமிழக பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் அசோகன், ஆந்திர மாநில நீர்வளப்பிரிவு அதிகாரிகளுக்கு தண்ணீர் திறக்க கோரி மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.

எனவே ஒப்பந்தப்படி நடப்பு ஆண்டுக்கான முதல் தவணை தண்ணீர் அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்தில் ஆந்திர அரசு திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News