செய்திகள்
சூனா பானா பெயரில் இ-பாஸ்

சூனா பானா பெயரில் இ-பாஸ் : சமூக வலைதளங்களில் வைரலாகிறது

Published On 2020-08-24 01:35 GMT   |   Update On 2020-08-24 01:35 GMT
நடிகர் வடிவேலு காமெடி கதாபாத்திர பெயரில் இ-பாஸ் விண்ணப்பித்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
திருப்பூர்:

நடிகர் வடிவேலுவின் காமெடி கதாபாத்திர பெயரில் இ-பாஸ் விண்ணப்பித்த மர்ம ஆசாமிகள் குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும் இந்த இ-பாஸ் விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் இ-பாஸ் நடைமுறை. இ-பாஸ் இருந்தால் மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியும். கடந்த காலங்களில் இருந்த கடும் விதிமுறைகள் காரணமாக விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கவில்லை. இதனால் உறவினர்களின் திருமணத்திற்கும், அவசர காரியங்களுக்கும் பொதுமக்கள் செல்ல முடியாமல் தவித்தனர். இ-பாசுக்கு விண்ணப்பித்து அதை பெறுவது பெரிய சவலாக பொதுமக்களுக்கு இருந்தது. குறிப்பாக மாவட்ட எல்லைகளில் குடியிருப்பவர்கள் வேலை தொடர்பாக பக்கத்து மாவட்டத்திற்கு சென்று வேலை செய்ய முடியாமல் தவித்தனர். இ-பாஸ் காரணமாக சுப காரியங்கள் தள்ளி வைக்கப்பட்டன. மருத்துவ மனைக்கு போக முடியாமல் தவித்தனர். வெளிமாவட்டம் சென்று மாத்திரை கூட வாங்க முடியாமல் சிரமம் அடைந்தனர். எனவே இ-பாஸ் முறையில் தளர்வு வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக கோரிக்கை எழுந்தது.

அதன்படி ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டைகளை இணைத்து இ-பாஸ் பெற விண்ணப்பித்தால் உடனடியாக இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேல் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் வடிவேல் காமெடி கதாபாத்திர பெயரில் சித்து வேலை செய்து சில மர்ம ஆசாமிகள் இ-பாஸ் பெற்றுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் பல்லடம் இந்திராநகர் என்ற தவறான முகவரியில் இருந்து டி.என். 01 எக்ஸ் 0000 என்ற காரில் திருமண நிகழ்ச்சிக்காக மதுரை செல்ல நடிகர் வடிவேலுவின் காமெடி கதாபாத்திர பெயரான சூனா பானா என்ற பெயரில் இ-பாஸ் பெற்றுள்ளனர். இ-பாஸ் பதிவு செய்ய கடைசி 4 எண்களை தெரிவிக்கும் வசதி இருப்பதால், கடைசி 4 எண்களையும் 0000 என்று பதிவு செய்துள்ளனர். மேலும், அதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சங்கி மங்கியின் மகன் சூனா பானா மற்றும் சங்கி மங்கி ஆகியோர் செல்ல விண்ணப்பித்திருந்தனர்.

இந்த விவரங்கள் அடிப்படையில் மதுரை மாவட்ட நிர்வாகமும் 23-ந் தேதி (நேற்று) மதுரை செல்வதற்கு இ-பாஸ் வழங்கியுள்ளது. இ-பாஸ் விண்ணப்பித்ததும் எந்த ஒரு பரிசீலனையும் இன்றி பாஸ் தானியங்கி மூலம் வழங்கப்படுவதால், இவ்வாறு விண்ணப்பித்து பரிசோதனை செய்துள்ளனர். இந்த இ-பாஸ் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவற்றில் வைரலாக பரவி வந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், “தவறான முகவரியை பயன்படுத்தி மதுரைக்கு செல்ல இ-பாஸ் பெற்றுள்ளனர். மதுரை மாவட்டத்தில் இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில அளவிலான கண்காணிப்பு குழுவிடம் புகார் அளிக்கப்படும்” என்றார்.

வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், “ இ-பாஸ் வழங்க 11 வகையான கட்டுப்பாட்டு விதிமுறைகள் உள்ளன. தவறான தகவல் தந்து இந்த பாஸ் பெற்றிருந்தால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பது முதல் விதிமுறை ஆகும். அந்த விதிமுறைப்படி இந்த பாஸ் விண்ணப்பித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இ-பாஸ் முறையில் தளர்வுகளை சற்று குறைக்க வேண்டும். அதாவது வாகன பதிவு எண், விண்ணப்பிக்கிறவர்களின் ஆதார் எண்களை சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும் வகையில் இதனை வடிவமைக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்று சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது” என்றனர்.
Tags:    

Similar News