செய்திகள்
விமானம் மூலம் நேற்று சென்னை வந்த வட மாநில தொழிலாளர்கள், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த காட்சி.

விமானத்தில் திரும்பும் தொழிலாளர்கள் - விறுவிறுப்பு அடையும் கட்டுமான பணி

Published On 2020-08-23 21:34 GMT   |   Update On 2020-08-23 21:34 GMT
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருப்பதால், வெளி மாநில தொழிலாளர்கள் விமானங்கள் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
சென்னை:

கொரோனா நோய்த் தொற்று எல்லோருடைய வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு விட்டது.

சென்னை நகரில் ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கட்டுமான பணிகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் போன்றவற்றில் இவர்கள் வேலை செய்து வந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கட்டுமான வேலைகள் உள்பட அனைத்து பணிகளும் முடங்கின. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் வருமானம் இல்லாததாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் சென்றனர்.

எப்படியாவது சொந்த ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்ற எண்ணத்தில் லாரி போன்ற வாகனங்களிலும், சைக்கிள்களிலும், பலர் நடந்தும் செல்லத் தொடங்கினார்கள்.

இதைத்தொடர்ந்து, வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக மத்திய அரசு சிறப்பு ரெயில்களை இயக்கியது. இதனால் சென்னை மட்டுமின்றி கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் வெளிமாநில தொழிலாளர்கள் ரெயில்கள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்தது.

இந்த நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்திய மத்திய அரசு கட்டுமான பணிகளை மீண்டும் மேற்கொள்ளவும், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களை மீண்டும் திறக்கவும் அனுமதி வழங்கியது. இதனால் அவை மீண்டும் செயல்பட தொடங்கின.

ஆனால் போதிய தொழிலாளர்கள் இல்லாததால் முழுஅளவில் பணிகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. சென்னை நகரில் போதிய தொழிலாளர்கள் இல்லாததால் பாலங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையே தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள், அங்கு சரியான வேலையோ, போதிய வருமானமோ கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் வேலைக்காக மீண்டும் சென்னை திரும்ப தயாராக இருக்கிறார்கள். அவர்களில் பலர், முன்பு தாங்கள் வேலைபார்த்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு இதுபற்றி பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில், இ-பாஸ் நடைமுறையில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்தது. இதனால், கட்டுமான நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் தங்களிடம் வேலை பார்த்த வெளிமாநில தொழிலாளர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டன. இன்னும் ரெயில்கள் ஓடாததால் தொழிலாளர்களை விமானம் மூலம் அழைத்து வர முடிவு செய்த நிறுவனங்கள், அவர்களுக்கு கூடுதல் வசதிகளை செய்து கொடுக்கவும் முன்வந்தன.

இதைத்தொடர்ந்து தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வர தொடங்கி உள்ளன.

அதன்படி, கடந்த ஒரு வாரமான வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். நேற்று ஒரு நாளில் மட்டும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விமானங்கள் மூலம் 625 பேர் அழைத்து வரப்பட்டு உள்ளனர். அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து 324 பேரும், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து 180 பேரும், பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து 182 பேரும் விமானங்கள் மூலம் வந்து இருக்கிறார்கள்.

விமானத்தில் நேற்று சென்னை வந்து சேர்ந்த தொழிலாளர்களை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வேன்கள் மூலம் பணியிடங்களுக்கு அழைத்துச் சென்றன.

வெளி மாநிலங்களில் இருந்து இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்னை வந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானம் மூலம் நேற்று சென்னை திரும்பிய வட மாநில தொழிலாளர்கள் சிலர் கூறுகையில், “சென்னையில் தற்போது நிலைமை சீராக இருப்பதாக அறிகிறோம். இதனால் பிழைப்பு தேடி மீண்டும் சென்னைக்கு வந்து இருக்கிறோம். நாங்கள் வருவது குறித்து, வேலை பார்க்கும் நிறுவனத்திடமும் தெரிவித்தோம். அவர்களும் உடனடியாக எங்களுக்கு டிக்கெட் ஏற்பாடு செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து விட்டனர். 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சென்னைக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றனர்.

இனி வரும் நாட்களில் வெளி மாநில தொழிலாளர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளி மாநில தொழிலாளர்கள் சென்னை திரும்புவதால், நகரில் கட்டுமான பணிகள் மீண்டும் விறுவிறுப்பு அடைய தொடங்கி உள்ளன.
Tags:    

Similar News