செய்திகள்
ராமதாஸ்

‘இளையோர் மேம்பாட்டு இயக்கம்’- டாக்டர் ராமதாஸ் புதிய இயக்கத்தை தொடங்கினார்

Published On 2020-08-20 14:15 GMT   |   Update On 2020-08-20 14:15 GMT
எல்லோரும் கல்வி, திறன் மேம்பாடு, பயிற்சி, வேலைவாய்ப்பு பெறவேண்டும் என்பதுதான் இளையோர் மேம்பாட்டு இயக்கம்தொடங்கப்பட்டதன் எளிய நோக்கம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இளைஞர்கள் தான் நாட்டின் வருங்கால தூண்கள் என்று வீராவேசமாக வசனம் பேசி விட்டு, அவர்களை அரசியலில் வெற்று முழக்கங்களை எழுப்பவும், வெறுப்பு அரசியலை வளர்க்கவும் மட்டும் பயன்படுத்தினால், அவர்கள் வருங்கால தூண்களாக இருக்க மாட்டார்கள். துரும்பாகத்தான் நலிவடைந்து போவார்கள். மாறாக அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, வாழ்வாதாரத்தை உறுதி செய்து, அதன்பிறகு ஆக்கப்பூர்வ அரசியலுக்கு பழக்கினால் அவர்களும் வளம் பெறுவார்கள். அவர்களால் நாடும் முன்னேறும். இந்த உன்னதமான நோக்கத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் ‘தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்கம்’ எனும் புதிய இயக்கத்தை தொடங்கியிருக்கிறேன்.

எல்லோரும் கல்வி, திறன் மேம்பாடு, பயிற்சி, வேலைவாய்ப்பு பெறவேண்டும் என்பதுதான் இந்த புதிய இயக்கம் தொடங்கப்பட்டதன் எளிய நோக்கம் ஆகும். அரசியல், சமூக, சமுதாய, கலாசார, மொழி, கல்வி, கலை, இலக்கியம், சுற்றுச்சூழல், இளைஞர் சக்தி, நல்லாட்சி, ஊடக அறம் உள்ளிட்டவற்றின் முன்னேற்றத்திற்காக இதுவரை 29 அமைப்புகளை நான் உருவாக்கியுள்ள நிலையில், 30-வது அமைப்பாக தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்கம் செயல்படும். இந்த புதிய இயக்கத்திற்கு சமூக முன்னேற்ற சங்கம், சமூக ஊடகப்பேரவை, பசுமைத் தாயகம் ஆகிய 3 அமைப்புகளும் வழிகாட்டும். தமிழகம் முழுவதும் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் நிலவவேண்டும் என்பது தான் எனது நோக்கம். அதற்கான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்கம் மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News