செய்திகள்
கலெக்டர் ஷில்பா

சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்படும்- கலெக்டர் ஷில்பா தகவல்

Published On 2020-08-20 08:13 GMT   |   Update On 2020-08-20 08:13 GMT
நெல்லை மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்படும் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கால்நடை வளர்ச்சி மற்றும் கால்நடை உற்பத்திக்கு தீவனம் இன்றியமையாததாகும். தீவன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசு மானியம் வழங்குகிறது. 2020-2021-ம் நிதியாண்டில் நெல்லை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தீவன சோளம், வேலிமசால் 270 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட உள்ளது. தீவன சோளம் கோ-4, 130 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட உள்ளது. மானாவாரியில் சோளம் மற்றும் தட்டைப்பயிறு 1900 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட உள்ளது. விவசாயிகளுக்கு எந்திர புல்வெட்டும் கருவி 75 சதவீத மானியத்துடன் 95 எண்ணம் வழங்கப்பட உள்ளது.

எனவே இந்த திட்டங்களில் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விவரங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் வருகிற 25-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் ஏற்கனவே பயனடைந்த பயனாளிகள் பயன்பெற இயலாது. பயிரிடப்படும் நிலம் சொந்தமாகவோ, குத்தகையாகவோ வைத்திருக்க வேண்டும். 2 முதல் 5 கால்நடைகள் வளர்ப்போராக இருத்தல் வேண்டும். பயனாளிகளில் 30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும்.

ஆவின் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு இலவச வெள்ளாடு, செம்மறியாடு வழங்கப்படும். இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News