செய்திகள்
விநாயகர் சிலைகள்

தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும்- இந்து முன்னணி அறிவிப்பால் பரபரப்பு

Published On 2020-08-19 04:30 GMT   |   Update On 2020-08-19 04:30 GMT
தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
சென்னை:

சென்னையில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கடந்த ஆண்டை போன்று கொண்டாட வேண்டும் என்று இந்துக்கள் விரும்புகிறார்கள்.

கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவுவதை கருத்தில் கொண்டு இந்து முன்னணியின் மாநில பொறுப்பாளர்கள் கலந்து ஆலோசனை செய்து இந்த ஆண்டு ஊர்வலம் வேண்டாம், பொது நிகழ்ச்சிகள் வேண்டாம் என்று முடிவு எடுத்து உள்ளோம்.

அதேநேரத்தில், கடந்த ஆண்டு எங்கெல்லாம் விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருந்ததோ, அந்த இடங்களில் எல்லாம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட வேண்டும். கடந்த 5-ந்தேதி தலைமை செயலகத்தில் நடைபெற்ற அரசு உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில், இந்து முன்னணியும் கலந்து கொண்டது.

அப்போது, விநாயகர் ஊர்வலம், பொது நிகழ்ச்சிகள் இருக்காது என்றும், விநாயகர் சிலைகளை வைப்பதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். 144 தடை உத்தரவின்போது, எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ? அதே போன்று நடந்து கொள்கிறோம் என்றும் தெரிவித்தோம்.

ஒரு விநாயகர் சிலைக்கு 5 பேர் கொண்ட குழு அமைத்து, ஒரே ஒரு நாள் சிலையை வைத்து வழிபட்டுவிட்டு, விநாயகரை கரைப்பதற்கு 5 பேர் எடுத்து சென்று ஊர்வலமாக இல்லாமல் தனித்தனியாக சென்று கரைப்போம் என்று வலியுறுத்தினோம். நேற்று (நேற்று முன்தினம்) முதல்-அமைச்சரை சந்தித்தோம், அப்போதும், இதே கோரிக்கையை வைத்தோம். தற்போது வரை அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு மக்கள் கூட்டமாக கூடுகிறார்கள். அங்கு வராத கொரோனா விநாயகர் சதுர்த்தி விழாவில் வந்துவிடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சனிக்கிழமைகளில் இரவு வரை மீன்கடை, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் கூடுகிறார்கள். இதனை அரசு அதிகாரிகளோ, காவல்துறையோ கண்டு கொள்ளவில்லை.

நாங்கள் அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு சிலைகளை வைக்கிறோம் என்று கூறினாலும் இந்த அரசாங்கம் எங்களை புறக்கணிக்கிறது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த போதும் அங்கு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

எனவே வருகிற 22-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இருக்கிறோம். தமிழகம் முழுவதும் 1½ லட்சம் சிலைகள், கடந்த ஆண்டு எங்கெல்லாம் வைக்கப்பட்டதோ அங்கு எல்லாம் வைத்து வழிபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News