செய்திகள்
நாமக்கல்லுக்கு முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆலோசனை கூட்டம்

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் வருகை- அமைச்சர் தகவல்

Published On 2020-08-18 11:31 GMT   |   Update On 2020-08-18 11:31 GMT
நாமக்கல்லுக்கு வருகிற 21-ந் தேதி கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தர இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அவர் வருகிற 21-ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்புபணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது முதல்-அமைச்சர் ஆய்வு பணிக்கு வரும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ந் தேதி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வருகை தர உள்ளார். பிற்பகல் 3 மணி அளவில் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எந்த அளவுக்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. எத்தனை படுக்கை வசதிகள் உள்ளன? என்பது குறித்தும், இதர பணிகள் குறித்தும் ஆய்வு செய்ய இருக்கிறார். மேலும் ஆய்வு கூட்டத்துக்கு முன்னதாகவோ அல்லது பின்போ முதல்-அமைச்சர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை பார்வையிட உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர்கள் சரோஜா, தங்கமணி ஆகியோர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், பொன்.சரஸ்வதி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் சாரதா, துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சித்ரா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம், மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News