செய்திகள்
கு.க.செல்வம்

உரிமை மீறல் நோட்டீஸ் விவகாரம்- கு.க.செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

Published On 2020-08-17 06:09 GMT   |   Update On 2020-08-17 06:09 GMT
உரிமை மீறல் நோட்டீஸ் விவகாரத்தில் கு.க.செல்வம் எம்எல்ஏவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை:

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். அத்துடன் கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தி.மு.க.வினர் கொண்டு சென்று சபாநாயகரிடம் காண்பித்தனர்.

இதையடுத்து தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்து, அந்த நோட்டீசுக்கு இடைக்கால தடை பெற்றனர். 

இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்யும்படி வாதாடினர். 

சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சார்பில் மூத்த வக்கீல்கள் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ, அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் வாதாடினர். அப்போது, உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் இறந்து விட்டதாகவும், கு.க.செல்வத்துக்கு தாங்கள் ஆஜராகவில்லை என்றும் கூறினர். 

எனவே, மற்ற உறுப்பினர்களின் வாதங்களையே தன் தரப்பு வாதமாக எடுக்கும்படி கு.க.செல்வம் கோரியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. வழக்கு விசாரணை நடந்தபோது எங்கே சென்றீர்கள்? என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், கு.க.செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.

ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவான கு.க.செல்வம், கட்சி கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி திமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News