செய்திகள்
கைது

சேதுபாவாசத்திரம் அருகே பழ வியாபாரி கொலை வழக்கில் 4 பேர் கைது

Published On 2020-08-16 08:27 GMT   |   Update On 2020-08-16 08:27 GMT
சேதுபாவாசத்திரம் அருகே நடந்த பழ வியாபாரி கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேதுபாவாசத்திரம்:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பட்டுநூல்கார தெருவை சேர்ந்தவர் வீரகுமார்(வயது27). பழ வியாபாரி. இவருடைய தந்தை பார்த்தீபன் (62) சேதுபாவாசத்திரம் அருகே இரண்டாம்புளிக்காடு கால்நடை மருத்துவமனையில் கால்நடை உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி சிவகாமியுடன்(57) இரண்டாம்புளிக்காட்டில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

பட்டுக்கோட்டை பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்த வீரகுமார் கடந்த 2 மாதங்களாக பெற்றோருடன் இரண்டாம்புளிக்காடு கிராமத்தில் தங்கினார். இந்த நிலையில் வீட்டில் இருந்த வீரகுமாரை நேற்று முன்தினம் சிலர் அழைத்து சென்றனர். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தேடியபோது, ஆண்டிக்காடு எட்டிவயல் எட்டியகுளம் அருகே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் சந்தேகத்தின்பேரில் போலீசார் பட்டுக்கோட்டை பூமல்லிகுள தெருவை சேர்ந்த நந்தகுமார் (27), சேதுபதி(21), அரிஹரன்(20), சத்தியமூர்த்தி(30) ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தெரியவந்த விவரங்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

நந்தகுமாரின் உறவினர் பெண்ணை வீரகுமாரின் நண்பர் ஒருவர் காதலிப்பதாக பல பேரிடம் கூறி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீரகுமாரின் நண்பரை தட்டிக்கேட்டார். இதில் தனது நண்பருக்கு ஆதரவாக வீரகுமார் பேசினார்.

அப்போது தகராறு ஏற்பட்டு நந்தகுமார், வீரகுமார் ஆகிய 2 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக திட்டமிட்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து வீரகுமாரை கொலை செய்ததாக நந்தகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக நந்தகுமார் மற்றும் அவருடைய நண்பர்கள் சேதுபதி, அரிஹரன், சத்தியமூர்த்தி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News