செய்திகள்
பாதிக்கப்படும் மக்களிடம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி பேச்சுவார்த்தை நடத்திய காட்ச

8 ஆயிரம் வீடுகளை இடிக்க திட்டம் - தஞ்சையில் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2020-08-15 10:29 GMT   |   Update On 2020-08-15 10:29 GMT
8 ஆயிரம் வீடுகளை இடிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து தஞ்சையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை பெரியகோவில் அருகே சீனிவாசபுரம், மேல அலங்கம், வடக்குவாசல், கொடிமரத்துமூலை, கீழ அலங்கம், தென்கீழ் அலங்கம் வரை அகழியானது ஏறத்தாழ 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு உள்ளது. இந்த அகழியையொட்டி நாயக்கமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பெரியகோட்டை சுவரும் உள்ளது.

இந்த பெரியகோட்டை சுவரை ஆசிய வங்கி நிதி உதவியுடனும், அகழி மேம்பாட்டு பணியை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அகழி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக வடக்குஅலங்கம், மேலஅலங்கம், செக்கடி உள்ளிட்ட இடங்களில் அகழி கரையில் உள்ள 8 ஆயிரம் வீடுகளை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. பின்னர் இந்த திட்ட நடவடிக்கை பல்வேறு காரணங்களால் நின்றுபோனது. இந்தநிலையில் வடக்குஅலங்கத்தில் அகழியையொட்டி உள்ள வீடுகளை கணக்கெடுத்து வீட்டின் கதவுகளில் குறியீடு செய்யும் பணியை மாநகராட்சி பணியாளர்கள் நேற்று தொடங்கினர்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். உடனே இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கொடிமரத்துமூலை அருகே வடக்குஅலங்கத்தின் தெருமுனையில் அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் 2 மணிநேரம் நீடித்தது. இந்த தகவலை அறிந்த தாசில்தார் வெங்கடேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன், மாநகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், பேச்சுவார்த்தைக்கு வரும்படி பொதுமக்களை அழைத்தனர்.

அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது வீடுகள் கணக்கெடுப்பு பணியை கைவிட வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் 1 வாரம் வரை காலஅவகாசம் வழங்கப்படும். அதன்பிறகு கணக்கெடுப்பு பணி நடைபெறும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 1 வாரம் கழித்து கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, அதன்மூலம் கருத்துக்களை கேட்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் பாதிக்கப்படும் மக்களை, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் எம்.ரெங்கசாமி நேரில் சந்தித்து, அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையிலும் கலந்து கொண்டு தனது கருத்தை தெரிவித்தார்.

இதையடுத்து எம்.ரெங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்மார்ட்சிட்டி என்ற பெயரில் தஞ்சை வடக்குஅலங்கம், மேலஅலங்கத்தில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்கின்றனர். தங்களை அப்புறப்படுத்தக்கூடாது என மக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். நானும் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது மாநகராட்சி குப்பை கிடங்கு இருக்கும் இடத்தில் குடியிருப்புகளை கட்டி, மக்கள் வசிக்க வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சட்டசபையில் பேசினேன்.

ஆனால் மக்களின் கருத்துக்கு செவிசாய்க்காமல் மாற்றுதிட்டத்தை செயல்படுத்தாமல் மக்களை எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படுகின்றனர். தமிழகஅரசு மக்களின் குரலுக்கு மதிப்பு கொடுத்து நல்வழியில் செயல்படும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News