செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் கொரோனாவுக்கு புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி

Published On 2020-08-15 09:34 GMT   |   Update On 2020-08-15 09:34 GMT
நெல்லையில் கொரோனாவுக்கு புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியானார்கள். தென்காசியில் 93 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 3 பேர் வெளியூரில் இருந்து வந்தவர்கள் ஆவர். மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 229 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5,675 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,444 பேர் நெல்லை அரசு, தனியார் ஆஸ்பத்திரி மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 110 பேர் பலியாகி உள்ளனர்.

நெல்லையை சேர்ந்த நகைக்கடை அதிபரின் 28 வயது மகனுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டது. உடனடியாக அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை அவர் உயிழந்தார்.

களக்காடு பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற 85 வயது ஆசிரியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லும் போது உயிரிழந்தார். இதையடுத்து சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அவரது உடலை பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்தனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 93 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 3,725 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,313 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,347 பேர் தென்காசி, நெல்லை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News