செய்திகள்
மண்எண்ணெயை உடலில் ஊற்றி கணவருடன் தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவி செல்வி.

கணவருடன் தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவி- தாராபுரத்தில் பரபரப்பு

Published On 2020-08-15 06:52 GMT   |   Update On 2020-08-15 06:52 GMT
ஊராட்சி வார்டு உறுப்பினர் மீதான புகாரை வாபஸ் வாங்க சொல்லி தொழிலதிபர் மிரட்டுவதாக கூறி கணவருடன் ஊராட்சி மன்ற தலைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கவுண்டச்சிபுதூர் ஊராட்சி. இந்த ஊராட்சி மன்ற தலைவியாக செல்வி என்பவர் இருந்து வருகிறார். இவருக்கும், ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் குப்புசாமிக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் 6-வது வார்டு உறுப்பினர் தன்னை சாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது செல்வி தாராபுரம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் 6-வது வார்டு உறுப்பினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை இன்னும் போலீசார் கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் குப்புசாமியின் ஆதரவாளரான தாராபுரம்-பொள்ளாச்சி சாலையை சேர்ந்த தொழிலதிபர் கோபாலகிருஷ்ணன் என்பவர் வீட்டிற்கு நேற்று இரவு 7.30 மணிக்கு ஊராட்சி தலைவி செல்வி, தனது கணவர் ரமேசுடன் சென்றார். பின்னர் திடீரென்று கோபாலகிருஷ்ணன் வீட்டின் முன்பு செல்வியும், அவருடைய கணவரும் தாங்கள் கொண்டு வந்து இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று செல்வி மற்றும் ரமேசிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கினர்.

இதற்கிடையில் செல்வி மயங்கி விழுந்தார். உடனே அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீஸ் துணை சூப்பரண்டு ஜெயராம், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் மயக்கம் தெளிந்த செல்வியிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது வார்டு உறுப்பினர் குப்புசாமி மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கும்படி கோபாலகிருஷ்ணன் மிரட்டி வருவதாகவும், இதனால் தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News