செய்திகள்
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்ட காட்சி.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

Published On 2020-08-14 16:06 GMT   |   Update On 2020-08-14 16:06 GMT
சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சேலம்:

நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணத்தால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இல்லாமல் சுதந்திர தினவிழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடாமல் இருக்கவும், வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்களை யாரும் வைத்து விடாமல் இருக்கவும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய துணை கண்காணிப்பாளர் பாபு தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவகாமி ராணி மற்றும் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் நேற்று ஜங்ஷன் ரெயில் நிலையம் முழுவதும் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் மோப்ப நாய்கள் ரூபி மற்றும் லூனா அழைத்து வரப்பட்டு வெடிகுண்டுகள் ஏதும் வைக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை நடத்தப்பட்டது.

இதுதவிர சேலம் மாநகர வெடிகுண்டு நிபுணர்களும் ஜங்ஷன் ரெயில் நிலையம் அழைத்து வரப்பட்டனர். அவர்களும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடி பொருட்கள் ஏதும் வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தினர். கொரோனா தொற்று காரணத்தால் தற்போது பயணிகள் ரெயில்கள் ஏதும் இயக்கப்படுவதில்லை. அதேசமயம், ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்காக ஜோலார்பேட்டை மற்றும் கோவைக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இதுதவிர கோவையில் இருந்து சென்னைக்கு சரக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்களிலும் போலீசார் கண்காணித்தனர். சுதந்திர தின விழா பாதுகாப்பை முன்னிட்டு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்குள் பொதுமக்கள் வர சேலம் ரெயில்வே போலீசார் தற்போது தடை விதித்துள்ளனர்.
Tags:    

Similar News