செய்திகள்
கொரோனா வைரஸ்

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் மும்முரம்

Published On 2020-08-14 14:30 GMT   |   Update On 2020-08-14 14:30 GMT
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சுல்தான்பேட்டை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 22 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து உள்ளது. சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வாரப்பட்டி, ஜல்லிபட்டி, எஸ்.குமாரபாளையம், பூராண்டாம்பாளையம், ஜே.கிருஷ்ணாபுரம், அப்பநாயக்கன்பட்டி, செலக்கரிச்சல், வடவள்ளி, கள்ளப்பாளையம், வதம்பச்சேரி, செஞ்சேரிப்புத்தூர் உள்பட மொத்தம் 20 ஊராட்சிகள் உள்ளன. இதில் சுமார் 1 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த 2-ந் தேதி நிலவரப்படி சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 11 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து, தற்போது எண்ணிக்கை 33 ஆக உள்ளது. இதன் காரணமாக கொரோனா பரவல் தடுப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி, ரவிச்சந்திரன் ஆகியோர் கூறியதாவது:-

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 33 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 22 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். தற்போது 11 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். யாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவில்லை.

தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் உள்பட ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும். சுல்தான்பேட்டை பஸ் நிறுத்தம், மெயின்ரோடு, வாரப்பட்டி, செலக்கரிச்சல், கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் தடுப்பு பணிகள் மேற்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் கபசுர குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆட்டோக்கள் உள்பட வாகனங்களில் சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

எனவே பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். அனைவரும் தங்களை தற்காத்துக்கொள்ள முன்வர வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News