செய்திகள்
சஸ்பெண்டு

கரூர் அருகே விவசாயியை தாக்கிய 2 போலீசார் பணியிடை நீக்கம்

Published On 2020-08-14 06:36 GMT   |   Update On 2020-08-14 06:36 GMT
கரூர் அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்திய பாலவிடுதி போலீசார் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
கரூர்:

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், இந்த மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, கடந்த 9-ந்தேதி கரூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இந்தநிலையில் தரகம்பட்டி அருகே உள்ள ஆலத்தூர் கடைவீதியில் பாலவிடுதி போலீஸ் ஏட்டு மணிகண்டன் (வயது 42), போலீஸ்காரர் பொன்ராஜ் (30) ஆகிய 2 பேரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஆலத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி பிச்சைமுத்து (50) என்பவர் இடையப்பட்டிக்கு சென்று விட்டு, ஆலத்தூருக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது போலீஸ்காரர்கள் 2 பேரும் சேர்ந்து பிச்சைமுத்துவை வழிமறித்து இப்பகுதியில் சந்துக்கடை எங்கு உள்ளது எனக்கூறி கேள்வி எழுப்பினர். இதற்கு பிச்சைமுத்து எனக்கு தெரியாது என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர்கள் பொன்ராஜ், மணிகண்டன் ஆகிய 2 பேரும் சேர்ந்து பிச்சைமுத்துவை தாக்கினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகவலன் விசாரணை நடத்தினார். பின்னர் விவசாயியை தாக்கிய போலீசார் பொன்ராஜ், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

சாத்தான்குளத்தில் தந்தை-மகனை தாக்கி கொலை செய்த வழக்கில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் கைது செய்யப்பட்டு சி.பி.ஐ. விசாரணை நடந்து வரும் இந்த நேரத்தில், கரூர் மாவட்ட போலீசார் விவசாயியை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News