செய்திகள்
16-ம் நூற்றாண்டு நடுகல்

ஸ்ரீவைகுண்டத்தில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு

Published On 2020-08-13 19:45 GMT   |   Update On 2020-08-13 19:45 GMT
ஸ்ரீவைகுண்டத்தில் 16, 17-ம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல் எனப்படும் நடுகல் இருப்பதை கண்டுபிடித்தார்.
ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான சிவகளை மாணிக்கம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஸ்ரீவைகுண்டம் குருசு கோவிலுக்கு செல்லும் வழியில் காவலர் குடியிருப்பு அருகே உள்ள வடகால் வாய்க்கால் படித்துறையில் சதிக்கல் எனப்படும் நடுகல் இருப்பதை கண்டுபிடித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இந்த நடுகல் 16, 17-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். இந்த கல்லானது, 89 சென்டி மீட்டர் நீளமும், 50 செ.மீ. உயரமும், 31 செ.மீ. அகலமும் கொண்டுள்ளது. அதில் ஒரு ஆண், 2 பெண்களுடன் அமர்ந்து இருப்பது போன்று உள்ளது. அந்த உருவங்கள் அனைத்தும் ஒரு காலை மடக்கி வைத்தும், மற்றொரு காலை தொங்க விட்டப்படியும் இருக்கிறது. ஆண் உருவத்தில் கிரீடம், ஆடை, ஆபரணங்களும், பெண்களின் உருவங்களில் கொண்டை, ஆடை, ஆபரணங்களும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.

இதுபோன்ற நடுகல்லானது நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 100-க்கும் அதிகமாக காணப்படுகின்றன. மேலும் விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் குறைந்த அளவில் உள்ளன. பொதுவாக இந்த வகையான நடு கற்களை மாலையம்மன், தீப்பாச்சியம்மன், தீப்பொறிஞ்சம்மன், மங்கம்மாள், உலகம்மன், ஆனந்தாயி அம்மன், அழகம்மை, புலிகுத்தியம்மன், ரங்க மன்னர் தீப்பாய்ச்சியம்மன் என்று பல பெயர்களில் உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News