செய்திகள்
கோப்புபடம்

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய தனி மயானம் - சுகாதாரத்துறையினர் வலியுறுத்தல்

Published On 2020-08-13 07:38 GMT   |   Update On 2020-08-13 07:38 GMT
கோவையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களைஅடக்கம் செய்ய தனி மயானம் ஒதுக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து உள்ளது. நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 பேர் வரை கொரோனா தொற்றினால் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். இவ்வாறு இறப்பவர்களின் உடல் சுகாதாரத்துறை வழிகாட்டுதல்படி கோவையில் ஆத்துப்பாலம் மற்றும் சொக்கம்புதூர் மின்மயானங்களில் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்படுகிறது.

மேற்கண்ட இரு மயனங்களிலும் இயற்கை மற்றும் பிற காரணங்களினால் இறந்தவர்களின் உடல்களும் அடக்கம் செய்யப்படுகிறது. எனவே கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலுடன் சுகாதாரத்துறையினர் காத்திருக்கும் அவலம் உள்ளது.

எனவே கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய தனி மயானம் ஒதுக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து சுகாதார துறையினர் கூறியதாவது:-

கோவையில் கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது சொக்கம்புதூர், ஆத்துபாலம் ஆகிய இரு இடங்களில் அடக்கம் செய்யப்பட்டாலும், மற்ற உடல்களும் இங்கு அடக்கம் செய்யப்படுகின்றன. இதுபோன்ற உடல்களுக்கு மத சடங்குகள் செய்ய நீண்ட நேரம் பிடிக்கிறது. இதனால் கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்களோடு நீண்ட நேரம் சுகாதார பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளது.

அதேபோல் கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல ஒரே ஒரு அமரர் ஊர்தி உள்ளது. இதனால் உடல்களை மயானத்திற்கு எடுத்து செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. சென்னையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய தனி மயானம் ஒதுக்கப்பட்டு போல் கோவையிலும் தனி மயானம் ஒதுக்க வேண்டும். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News