செய்திகள்
கோப்புபடம்

கோவையில் ரூ.1¼ கோடி தங்க கட்டி மோசடி - போலீசார் விசாரணை

Published On 2020-08-13 07:28 GMT   |   Update On 2020-08-13 07:28 GMT
கோவையில் நடந்த ரூ.1¼ கோடி தங்க கட்டி மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

கோவை செல்வபுரம் சாவித்திரி நகரை சேர்ந்தவர் அனந்த பத்மநாபன் (வயது 43). இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் தியாகி குமரன் வீதியை சேர்ந்த கணேசன் (50) என்பவரிடம் பல ஆண்டுகளாக தங்க கட்டிகளை கொடுத்து ஆபரணமாக செய்து வாங்கி வந்தார்.

இதேபோல் கடந்த ஜூன் மாதம் கணேசனிடம் 3 கிலோ 216 கிராம் தங்க கட்டியை கொடுத்து சங்கிலி செய்து தருமாறு கூறினார். அதில் 96 பவுன் தங்க நகையை கணேசன் ஆபரணமாக செய்து அனந்த பத்மநாபனிடம் திருப்பி கொடுத்தார். மீதமுள்ள நகையை கேட்டபோது விரைவில் செய்து தருவதாக கூறிவந்தார். ஆனால் பல நாட்களாகியும் கணேசன் நகையை திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த அனந்த பத்மநாபன் அவரிடம் மீண்டும் நகையை கேட்டுள்ளார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளார். இதில் சந்தேகம் அடைந்த அனந்த பத்மநாபன் அவரது வீட்டுக்கு சென்று பார்த்து உள்ளார். அவர் அங்கு இல்லை.

கணேசன் மோசடி செய்த நகையின் மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அனந்தபத்மநாபன், செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News