செய்திகள்
முத்துப்பாண்டி

சுரண்டை அருகே வீட்டில் புகுந்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் சரமாரி வெட்டிக்கொலை

Published On 2020-08-13 07:25 GMT   |   Update On 2020-08-13 07:25 GMT
டாஸ்மாக் மேற்பார்வையாளர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
தென்காசி:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 51). இவரது மனைவி உஷா (40). இவர்களுக்கு விஷ்வா (14), வினித் (12) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

சுரண்டை அருகே சாம்பவர் வடகரை அடுத்துள்ள ஊர்மேல்அழகியான் சங்குபுரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையில் முத்துப்பாண்டி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இதனால் அவர் சாம்பவர் வடகரையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உஷா தனது மகன்களை அழைத்துக் கொண்டு சங்கரன்கோவிலில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் முத்துப்பாண்டி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் முத்துப்பாண்டி வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு முத்துப்பாண்டி உடலில் பல்வேறு இடங்களில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாம்பவர் வடகரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முத்துப்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.8 லட்சத்தை முத்துப்பாண்டி தனது வீட்டில் வைத்து உள்ளார். மேலும், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததால், இதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் முத்துப்பாண்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து உள்ளனர். அங்கு பணத்தை கேட்டு தகராறு செய்தபோது ஏற்பட்ட பிரச்சினையில் மர்ம நபர்கள், முத்துப்பாண்டியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அந்த பணம் வீட்டில் ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததால் தப்பியது. மேலும், முன்விரோதம் காரணமாகவும் இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Tags:    

Similar News