செய்திகள்
கோப்புபடம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பதுக்கி வைக்கப்பட்ட 300 மணல் மூடைகள் பறிமுதல்

Published On 2020-08-12 11:19 GMT   |   Update On 2020-08-12 11:19 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பதுக்கி வைக்கப்பட்ட 300 மணல் மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை இருப்பதால் மலை அடிவாரப்பகுதிகளில் ஏராளமான மணல்கள் குவிந்து உள்ளன. இவ்வாறு குவிந்துள்ள மணல்களை பல்வேறு வாகனங்கள் மூலம் பலர் அவ்வப்போது அனுமதியின்றி அள்ளி வந்து விற்பனை செய்து வந்தனர். இந்தநிலையில் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினேஷ்குமார் நடவடிக்கையின் பேரில் மணல் திருட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் குறைந்திருந்தது. ஆனால் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனம் மூலம் மணல் கடத்தி ஒரு இடத்தில் ஏராளமான மணல் மூடைகள் பதுக்கி வைத்திருப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் சரவணன் மற்றும் வருவாய் ஆய்வாளர் பால்துரை ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் பால்துரை மற்றும் வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள் அய்யம்பட்டி தெருவிற்கு சென்றனர். அப்போது அங்கு 300 மணல் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த்துறையினர் மணல் மூடைகளை பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தாசில்தார் சரவணன் கூறியதாவது:- இரு சக்கர வாகனங்கள் மூலம் மணல் கடத்தி பிடிபடுபவர்கள் மீது மாவட்ட கலெக்டர் மற்றும் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் ஆகியோருக்கு பரிந்துரை செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
Tags:    

Similar News