செய்திகள்
விஜயதரணி எம்.எல்.ஏ.

கடைகளை இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும்- விஜயதரணி வலியுறுத்தல்

Published On 2020-08-12 01:16 GMT   |   Update On 2020-08-12 01:16 GMT
குமரி மாவட்டத்தில் உள்ள கடைகளை இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று விஜயதரணி எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் உள்ள கடைகளை இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று விஜயதரணி எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் பிற மாவட்டங்களில் இரவு 8 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கும் போது, குமரி மாவட்டத்தில் மாலை 5 மணிக்கு கடைகளை அடைக்க சொல்வது முறையல்ல.

குமரி மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பெரிய தொழிற்சாலைகள் இல்லை. இதனால் விவசாய பணிகள் மற்றும் கூலி வேலைக்கு மக்கள் சென்று விட்டு, தங்களுக்கு அன்றாடம் கிடைக்கும் பணத்தை கொண்டு மாலை 6 மணிக்கு கடைக்கு சென்று உணவு பொருட்கள் வாங்கி சமைத்து சாப்பிடுவது வழக்கம்.

மேலும் அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்கள் மாலை 6 மணிக்கு பணியை முடித்து விட்டு, தங்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்வது வழக்கம். ஆனால் வணிக நிறுவனங்கள், சிறுகடைகள் கூட மாலை 5 மணிக்கு மேல் இயங்காமல் இருப்பதால், மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். நோய் தாக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். அதே வேளை பொருட்களை வாங்க வசதியாக குமரி மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் இரவு 8 மணி வரை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.

தற்போது பள்ளி, கல்லூரி சேர்க்கை நாட்கள் என்பதால் அனைவரும் சாதி, வருமானம் போன்ற சான்றிதழ்கள் பதிவிறக்கம் மற்றும் பள்ளி, கல்லூரி, தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு மனு செய்வதும் தற்போது நடைபெறுகிறது. சான்றுகள் வேண்டி மனு செய்ய உள்ளதால், இ-சேவை மையங்களையும் இரவு 8 மணி வரை திறந்து செயல்பட நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அதில் விஜயதரணி எம்.எல்.ஏ. கூறி உள்ளார்.
Tags:    

Similar News