செய்திகள்
முத்தரசன்

பொதுபோக்குவரத்தை தொடங்க வேண்டும்- முத்தரசன் பேட்டி

Published On 2020-08-12 00:41 GMT   |   Update On 2020-08-12 00:41 GMT
ஊழல் மலிந்து விட்ட இ-பாஸ் முறையை ரத்து செய்து, பொதுபோக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
திருப்பூர்:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த 2 நாட்கள் திருப்பூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகத்தில் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முத்தரசன், துணை செயலாளர்கள் சுப்பராயன் எம்.பி., வீரபாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மகேந்திரன், வெங்கடாசலம், மாநில பொருளாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கொரோனா கால நெருக்கடிகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில செயலாளர் முத்தரசன் நேற்று திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகம் பற்றி அவதூறு பரப்பி வரும் சமூக விரோத கும்பலை கைது செய்ய வலியுறுத்தியும் வருகிற 18-ந் தேதி அரசு அலுவலகங்கள் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். நடுத்தர தொழில் துறையினரின் வங்கி கடன் மீதான வட்டி, கூட்டுவட்டி, அபராத வட்டி என அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் வங்கி கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

கிராமப்புறங்களில் 100 நாட்கள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். புதிய கல்விக்கொள்கை குலக்கல்வி திட்டத்தை நிறைவேற்றும் நோக்கம் கொண்டிருப்பதால் தமிழ்நாடு அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும். மின்சார திருத்த மசோதா, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) 2, 3, 4-ந் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

நில அளவை கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். அரசு கொள்முதல் செய்யும் விலையில் தனியார் பால் கொள்முதல் நிலையங்களில் பால் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களில் 75 சதவீதம் பணியாளர்கள் வேலை செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் பொது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் பணியிடங்களுக்கு தொழிலாளர்கள் வர முடியாமல் தவிக்கிறார்கள். அரசு நடைமுறைப்படுத்தி வரும் இ-பாஸ் முறையில் ஊழல் மலிந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இ-பாஸ் முறையை ரத்து செய்து கட்டுப்பாடுகளை அனுசரித்து பொது போக்குவரத்தை தொடங்க வேண்டும்.

அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரமும், புலம்பெயர்ந்த அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 500-ம் நிவாரண நிதி வழங்க வேண்டும். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் தமிழகத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். கேரள அரசு இறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.25 லட்சமும், காயம்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசு, கேரள அரசு, தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்து மக்களுக்கு உதவ வேண்டும். கொரோனா உயிர் பலி விவரத்தை தெரிவிப்பதில் முரண்பாடு இருப்பதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து தெரிவித்து வருகிறது. தமிழக அரசை பொறுத்தவரை பணத்தில் மட்டுமல்ல பிணத்திலும் ஊழல் செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News