செய்திகள்
தற்கொலை

செல்போன் தர பெற்றோர் மறுத்ததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-08-11 23:27 GMT   |   Update On 2020-08-11 23:27 GMT
செல்போன் தர பெற்றோர் மறுத்ததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
சூலூர்:

செல்போன் தர பெற்றோர் மறுத்ததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவம் குறித்து குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

சூலூர் அடுத்த தென்னம்பாளையம் கருணாம்பிகை நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் ஜீவா (18) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த மாதத்தில் வெளியான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில் ஜீவா 2 பாடத்தில் தோல்வி அடைந்தார். இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜீவா தனது செல்போனை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பெற்றோர், ஏற்கனவே நீ அதிகமாக செல்போனை பயன்படுத்தியதால்தான் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாய். எனவே செல்போனை பார்க்கக்கூடாது என்று கூறி அவரிடம் இருந்து செல்போனை பறித்துச்சென்றனர்.

அவர் தனது பெற்றோரிடம் பலமுறை செல்போனை கேட்டும் அவர்கள் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜீவா, தனது அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடந்த பெற்றோர், அந்த அறையின் கதவை தட்டினார்கள். பலமுறை தட்டியும் திறக்கப்படவில்லை.

இதனால் கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு ஜீவா தூக்கில் பிணமாக தொங்கினார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்றோர் செல்போனை கொடுக்க மறுத்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News