செய்திகள்
மு.க.ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலுக்கு தி.மு.க.வினர் தயாராக வேண்டும்- மு.க.ஸ்டாலின் உத்தரவு

Published On 2020-08-11 21:05 GMT   |   Update On 2020-08-11 21:05 GMT
உடல்நலம், கட்சி பணி, மக்கள் சேவை ஆகிய மூன்றும் முக்கியம் என்றும், சட்டமன்ற தேர்தலுக்கு தி.மு.க.வினர் தயாராக வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:

கொரோனாவால் உயிரிழந்த காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் ஜி.சுகுமாறன், உடல்நலக்குறைவால் உயிரிழந்த கந்தர்வகோட்டையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மாரியய்யா ஆகியோரின் உருவப்படங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம் செலுத்தி பேசும்போது, ‘காஞ்சீபுரம் என்றால் நினைவுக்கு வருகிற முகங்களில், பெயர்களில் ஒன்றாக ஜி.சுகுமாறன் இருந்தார். ‘கந்தர்வகோட்டையின் கட்டபொம்மன்’ என்று கருணாநிதியால் புகழப்பட்டவர் மாரியய்யா’ என்று கூறினார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இது கொரோனா காலம் என்பதை யாரும் மறந்துவிடாதீர்கள். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனை நாம் இழந்துள்ளோம். இன்னும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். ‘மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என்ற நிலையில்தான் இன்றைக்கு மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன.

கொரோனா வெகுவாகப் பரவி வருகிறது, மக்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை இந்த நாட்டின் பிரதமரும் மறந்துவிட்டார். தமிழக முதல்-அமைச்சரும் மறந்துவிட்டார். அவர்கள் வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள். ஆனால் மக்கள் தான் கொரோனாவோடு யுத்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

கொரோனாவில் இருந்து மக்களைக் காக்க தங்களது உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லை. அதுதான் உண்மை. மருத்துவர்களின் மரணங்களே மறைக்கப்படுகின்றன. ஐ.சி.எம்.ஆர். அறிக்கையையே, இந்த நாட்டின் அமைச்சர் தவறான தகவல் என்கிறார். மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நாடாக இது மாறிவிட்டது. அதேபோல் இறப்புகள் பெரும்பாலும் மறைக்கப்படுகின்றன. சும்மா குத்துமதிப்பாக எண்ணிக்கை சொல்கிறார்களே தவிர, இவை உண்மையான எண்ணிக்கைகள் அல்ல. மொத்தத்தில் தனது தவறுகளை மறைக்கும் அரசாக, ஊழல்களை மறைக்கும் அரசாக, மக்களின் மரணங்களை மறைக்கும் அரசாக அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது.

கொரோனாவோடு சேர்ந்து இந்த ஆட்சியும் எப்போது முடியும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

உடல்நலம், கட்சி பணி, மக்கள் சேவை ஆகிய மூன்றையும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. அந்தப் பெரும்பணிக்கு அனைவரும் தயாராக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News