செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published On 2020-08-11 10:22 GMT   |   Update On 2020-08-11 10:22 GMT
அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்திலும், தமிழகத்தின் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி(சனிக்கிழமை) வரை தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று சுமார் 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags:    

Similar News