செய்திகள்
டாஸ்மாக்

டாஸ்மாக் கடைகளில் கிரெடிட் கார்டு கொடுத்து மது வாங்கும் வசதி விரைவில் அறிமுகம்

Published On 2020-08-11 03:10 GMT   |   Update On 2020-08-11 03:10 GMT
மின்னணு விற்பனை எந்திரங்கள் வாயிலாக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபான விற்பனை தொகையை மின்மயமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை :

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) சார்பில் 5 ஆயிரத்து 330 மதுபான கடைகள் தமிழகத்தில் உள்ளன. அனைத்து மதுபான கடைகளிலும் மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவுவதற்காக வங்கிகளிடம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இந்த ஒப்பந்தப்புள்ளியில் 7 வங்கிகள் கலந்து கொண்டன.

அவற்றில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மற்ற வங்கிகளை விட குறைவான ஒப்பந்தப்புள்ளி தொகை குறிப்பிட்டு மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவுவதற்கு தேர்வாகி உள்ளது. டாஸ்மாக் இயக்குனர் குழுமம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியுடன் இதுதொடர்பான ஒப்பந்தம் செய்துகொள்ள டாஸ்மாக் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மின்னணு விற்பனை எந்திரங்கள் வாயிலாக டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதற்குரிய தொகையை டெபிட் கார்டுகள், யு.பி.ஐ. (ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் இடைமுகம்), பீம் யு.பி.ஐ., யு.பி.ஐ. கியூ ஆர் கோட், கிரெடிட் கார்டு, இன்டர்நேஷனல் கார்டு ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம். மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவும் பணி சுமார் 2 மாதங்களில் நிறைவடையும். டாஸ்மாக் கடைகளில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் இந்த மின்னணு விற்பனை கருவியை பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படும்.

சென்னை ஐகோர்ட்டு கடந்த மே மாதம் அளித்த தீர்ப்பில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மின்னணு விற்பனை எந்திரங்கள் வழியாக விற்பனை தொகையை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க மின்னணு விற்பனை எந்திரங்கள் வாயிலாக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபான விற்பனை தொகையை மின்மயமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News